மூன்றாவது அடிப்படை . இல்மு திக்ரு .

2- ஜிஹாத் என்பது இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்காக இஸ்லாத்தின் விரோதிகளுடன் ஆயதமேந்திச் செய்யப்படும் புனிதப் போராகும். இதன் சிறப்பு தனியானது .உயர்வானது . இதிலே கலந்து கொள்பவர்களுக்கு அளப்பரிய நன்மைகள் கிடைப்பதாகவும் அவர் முஃமினாக மரணிப்பார் என்ற நற்சோபனமும் , இதிலே கலந்து கொண்டு தனது இன்னுயிரை நீற்பவர் ‘ ஷஹீத் ‘ தியாகி பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்படுவதாகவும்; இவரது பாவங்கள் இவரின் முதல்த்துளி இரத்தம் தரையில் சிந்தப்பட முன்பே மன்னிக்கப்பட்டு விடுவதாகவும் அல்குர்ஆனும் அல்ஹதீஸூம் சொல்லிக் கொண்டிருக்கின்றன .

இது தவிர இஸ்லாத்தின் உயர்வுக்காக இஸ்லாத்தின் பக்கம் முஸ்லிமல்லாத மக்களை அழைப்பதற்கான முயற்சியை தஃவா முயற்சி எனப்படும். இதற்கும் பல சிறப்புக்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இது வேறு ஜிஹாத் வேறு . முஸ்லிம் மக்களுக்கே அவர்களுக்குத் தேவையான மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்களைக் கற்றுக் கொடுப்பது அதற்காக வெளிக்கிழம்புவது வேறு இதற்கு தஃலீம், தர்பியா -அறப்போதனை எனப்படும். இவையனைத்துமே நல்ல விடயங்களாயிருப்பினும் இவை வெவ்வேறானவை . இவற்றுக்குக் கொடுக்கப்படும் நன்மைகளும் வெவ்வேறானவை . ஆக நபியவர்களின் காலத்தில் வாளேந்தி ஜிஹாத் செய்வதற்காகவும் நபியவர்கள் பல ஜமாஅத்துக்களை அனுப்பி வைத்தார்கள் . முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்காகவும் பல ஜமாஅத்களை அனுப்பியுள்ளார்கள். முஸ்லிம்களுக்கு மார்க்க விடயங்களைக் கற்றுக் கொடுப்பதற்கும் ஜமாஅத்துக்களை அனுப்பியிருக்கின்றார்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு வகை நன்மை கிடைப்பதாகவும் வாக்களித்துள்ளார்கள் .

ஆனால் இன்றைய தப்லீக் பெரியார்கள் இவ்விடயத்தில் மாபெரும் மோசடியையும் பித்அத் ஒன்றையும் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஜிஹாத் சம்பந்தமாக , அதில் செல்வதன் சிறப்பு அதில் ஈடுபடுபவருக்குக் கிடைக்கும் நன்மைகள் சம்பந்தமாக வந்துள்ள நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் மாற்றித் திருபுபடுத்தி அவற்றையெல்லாம் இவர்கள் புரியும் தப்லீக் முயற்சி சம்பந்தமான, அதற்கு ஆதாரமாக வந்துள்ள வசனங்களாக அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் புரிந்து வருகின்றனர் . இது இவர்கள் அல்குர்ஆன் வசனங்களுக்கு பொருள் சொல்லும் விடயத்தில் புரியும் மகா பெரிய பித்அத்துகளில் ஒன்றாகும் . அதே போன்று இவர்களது ஜமாஅத்தில் வெளிக்கிளம்பாதவர்களை ஜிஹாதுக்குச் செல்லாதிருந்தவர்களைக் கண்டித்து இறங்கிய வசனங்களை ஆதாரமாகக் காட்டி சாடுகின்றனர் ,தூற்றுகின்றனர் , அச்சுறுத்துகின்றனர் . இது எவ்வளவு பெரிய குற்றம் என்று தெரியுமா ?? இப்படியான இறை வசனங்களில் மோசடிசெய்த எஹூதிகளைக் கண்டித்து அல்லாஹ்…

‘அவர்கள் (இறை வசனங்களை) அதன் இடத்தை விட்டும் திரிபு படுத்துகின்றனர் . இவர்களது இதயங்களைத் தூய்மையாக்க அல்லாஹ் விரும்பவில்லை . இவர்களுக்கு உலகத்திலேயே பெருங்கேவலமும் , மறுமையில் அல்லாஹ்வின் கடுமையான வேதனையும் உண்டு ‘ என்று கூறுகின்றான் .
(அல் மாயிதா 41ம் வசனம் )

நபியவர்களும் ‘யார் அல்குர்ஆனுக்கு தமது மனோ இச்சைப்படி – தனது அபிப்பிராயத்தின் படி வியாகியானம் வழங்குகின்றாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்றும் ஒருவர் தனது சொந்த அபிப்பிராயத்தின் படி குர்ஆனுக்கு விளக்கமளிக்க முற்பட்டால் அவர் சரியாகச் சொன்னாலும் தவறிழைத்தவராகவே கருதப்படுவார் எனவும் கூறியுள்ளார்கள் . (ஆதாரம் திர்மிதி 3676 )

ஆனால் இவர்களோ இவ்வாறு ஜிஹாத் சம்பத்தப்பட்ட வசனங்களையும் நபிமொழிகளையும் தமது இயக்கத்துக்கு ஆள்ச் சேர்க்கப் பயன்படுத்தியதன் விளைவு இன்று ஜிஹாத் என்றாலே குலை நடுங்கமளவுக்குக் கோழைத்தனமும் , ஜிஹாதைப் பற்றிய தவறான கண்ணோட்டம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேயே உருவாகியுள்ளது. ஏதோ நபியவர்களே தப்லீக் ஜமாஅத்தின் அமீராக இருந்து ஜமாஅத்துக்களை அனுப்பி வைத்தது போன்று ‘நபியவர்கள் ஜமாத் ஒன்றை அனுப்பினாங்கோ ‘ என்று தமது பயான்களில் அல்லாஹ்வுக்குக் கொஞ்சமும் பயப்படாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் . அல்லாஹ்தான் நேர்வழிகாட்ட வேண்டும்.

3- தீன் என்பதன் பொருள் ஆளமானது , விரிவானது . ஒரு மனிதன் இஸ்லாத்தின் வழிகாட்டல்ப்படி செய்யும் மார்க்க உலக சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்துமே தீன் என்ற சொல்லுக்குள் அடங்கும் . நபியவர்கள் ஒருவன் தனது மனைவிக்கு ஒரு கவளம் உணவு ஊட்டி விடுவதைக்கூட ஏன்.. தன் அவன் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதைக்கூட தீனுடைய விடயம் , நன்மையை ஈட்டித்தரும் விடயம் என்று கூறியுள்ளார்கள் . ( புகாரீ )
.
ஆனால் இன்றைய தப்லீக் பெரியார்கள் தீன் என்ற சொல்லைச் சுருக்கி குறுகிய வட்டத்துக்குள்ளாக்கி தப்லீக் ஜமாஅத்தில் செல்வதும் அதன்பெரியார்கள் அங்கீகரித்தவற்றில் ஈடுபடுவதும் , தஃலீம் புத்தகங்களை பக்தியுடன் வாசிப்பது மாத்திரமே தீன் என்று பாமர கார்க்கூன்கள் புரியுமளவுக்கு ஆக்கிவிட்டார்களா இல்லையா? இதற்குப் பெயர் பித்அத்தா இல்லையா,? நீங்களே சொல்லுங்கள் .

இன்று தப்லீக் கார்க்கூன்கள் தமக்குள் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொள்ளும் போது அவர் எவ்வளவுதான் நல்லவராக ஆலிமாகக் கூட இருப்பினும் தப்லீக்குடன் தொடர்பில்லாதவராயின் ‘ அவர் தீனை விட்டும் தூரமானவர்’ என்று சொல்கின்றார்களா இல்லையா? நீங்களே தீர்ப்பளியுங்கள் .

இந்த தப்லீக் பெரியார்கள் இவர்களது ஜமாஅத் மாத்திரம் தான் தீன் வழி நடக்கும் ஜமாஅத் . இதில் பங்கெடுக்காதவர்கள் தீனை விட்டும் தூரமானவர்கள் . இதில் வாசிக்கப்படும் – இவர்களது உலமாக்களால்ப் போதிக்கப்படும் விடயங்கள் மாத்திமே தீனுடைய விடயங்கள் ஏனைய அனைத்துமே தீனுக்கு அப்பாற்பட்டவை என்று இவர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளதால் தப்லீக் கார்க்கூன்கள் இப்படிப் பேசித்திரிவதை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது .இதுவும் இஸ்லாத்துக்குத் தவறானதொரு வடிவம் கொடுக்கும் மகா பெரிய பித்அத்துக்களில் ஒன்றாகும் . இந்த ஹக்கான தீனுடைய வேலையில் நாம் இஸ்த்திகாமத்தாக இருக்க வேண்டும் . இதில் குறை காண்பவர் இதை விட்டும் வெளியேற்றப்படுவார் ‘ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இவர்களிடம் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்படுகின்றன . இவை மிக அபாயகரமான வார்த்தைகள் . தப்லீக்கில் இல்லாத அனைவரும் வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்று மறைமுகமாக உணர்த்தும் வார்த்தைகள் .

என்னை ஒரு தடவை தப்லீக்கில் பயான் செய்வதற்காக அழைத்திருந்தார்கள். எனக்கும் தப்லீக்கும் இருந்த தொடர்பு குறைய ஆரம்பித்திருந்த காலம் அது. நான் நல்லபடியாகவே பயான் செய்து விட்டு தஷ;க்கீல் பண்ணும் போது(வக்தில் வெளிக்; கிளம்ப ஆள்த்திரட்டல்) பயானில் இருந்தவர்களைப்பார்த்து ‘சகோதரர்களே! இன்று ஒவ்வொருவரும் தீனைப்பற்றி அறிந்திருக்க வேண்டியிருக்கின்றது . இன்று தீனைத் தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன .அதிலொன்றுதான் இந்த தப்லீக் ஜமாஅத் அமைப்பாகும் எனவே தயங்காது பெயர்களைத் தாருங்கள் என்றேன் ‘ அவ்வளவுதான் . பயானின் பின்னர் அவர்கள் என்னோடு நடந்து கொண்ட விதமே வேறு . அதுதான் நான்தப்லீக்கில் செய்த இறுதி பயானாகும் . அதன் பின்பு எந்த பயானுக்கும் என்னை அழைப்பது கிடையாது . அவர்களது குற்றச்சாட்டு என்ன தெரியுமா ? நான் ‘இன்று இஸ்லாத்தை – தீனை அறிந்து கொள்வதற்குரிய ஒரே வழி தப்லீக்கில் வெளிக் கிளம்பிச் செல்வது மாத்திரம்தான் ‘ என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருப்பார்கள் . பிரியாணி சாப்பாடும் தந்து உபசரித்திருப்பார்கள் . ஆனால்??.. இதன்பின் நான் தப்லீக்கில் இருந்து ஓரங்கட்டட்பட்டு விட்டேன் . எப்போதாவது இவர்களின் ஜூமைராத் பயானில் இருந்து விட்டால் ஒற்றர்களைப் பார்ப்பது போது மிகவும் எச்சரிக்கையுடன் எனது நடவடிக்கைகளை அவதானிப்பார்கள் .

இன்று இந்த அமைப்புக்கு ஆதரவு வழங்குவது போல் செயற்படும் அதிக மௌலவிமார் தாம் இந்த அமைப்பினருக்கு ஆதரவாக இருக்காவிட்டால் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு விடுவோம் . ஆதரவளித்தால் கண்ணியத்துடன் நடத்துவார்கள் என்ற குறுகிய நோக்கத்துடனேயே செயற்படுகின்றார்கள் . அவர்களிடம் நீங்கள் மனந்திறந்து பேசும் போது இது உண்மையென்பதை அறிந்து கொள்வீர்கள் . இதை நான் பலமுறை பல உலமாக்களிடம் பரீட்சித்தறிந்திருக்கின்றேன் .

4- பைதல் (கால்நடையாக ) ஜமாஅத்தில் செல்லுதல் .

கால்நடையாக ஜமாஅத்தில் செல்வதை மிகப்பெரியதொரு மார்க்கப்போர் செய்வது போன்று இவர்களுக்குச் சித்தரிக்கப்படுகின்றது . யாருடைய இரு பாதங்களும் இறைபாதையில் புழுதி படிந்தனவாகின்றதோ அவற்றை அல்லாஹ் நரகத்துக்கு ஹராமாக்கி விடுகின்றான் எனும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர். இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதுதான் .( புகாரி , திர்மிதி, தாரமி,அஹ்மத்,மஜ்மஉஸ்ஸவாயித்)

ஆனால் இவர்களது செயலுக்கு அது ஆதாரமாகாது . ஏனெனில் அல்லாஹ்வின் பாதை என்பது ஜிஹாதையே குறிக்கும். அறிவைத் தேடும் பயணத்துக்கும் சில வேளை அல்லாஹ்வின் பாதை எனும்பெயர் உபயோகப்படுத்தப்பட்டாலும் இந்த ஹதீஸைப் பொறுத்தவரைக்கும் அது பொருந்தாது .காரணம் இந்த ஹதீஸின் தொடரிலேயே எவர் அல்லாஹ்வின்; பாதையில் காயமுற்று அதன் மூலம் இறக்கின்றாறோ அவரது இரத்தம் மறுமையில் கஸ்த்தூரி வாடையை விடவும் மணம் வீசும் எனவும் உள்ளது . எனவே இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் பாதையென்பது ஜிஹாதையே குறிக்கும் என்பது தெளிவாகின்றது .

ஒரு பேச்சுக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் கூட எதேர்ச்சையாக அவரது கால் மண்ணில் மிதிபட்டு புழுதி படிவதே இங்கு நோக்கமேயன்றி வேண்டுமென்று புழுதியில் போட்டு காலைப் புரட்டியெடுப்பது நோக்கமன்று . ஆனால் தப்லீக்கின் கால்நடை ஜமாஅத்தின் நோக்கம் இதுவாகவே உள்ளது . எல்லா வாகன வசதியிருந்தும் பிரயாணத்துக்குரிய செலவினங்களிருந்தும் இவ்வாறு நடந்து செல்வது பிறருக்கு தாம் செய்யும் தியாகத்தை வெளிக்காட்டி ஒருவித செயற்கை பக்தியை உருவாக்குவதே இவர்களது உள்நோக்கம் .

ரோமாபுரிப்போரின் போது மாலிக் எனும் ஒரு நபித்தோழர் வாகனமிருந்தும் தரையில் நடந்து சென்றதாகவும் மற்ற முஸ்லிம்கள் அவரிடம் இது பற்றிக் கேட்ட போது மேற்படி ஹதீஸைக் கூறியதாகவும் அதன் பின்பு அங்கிருந்தவர்களில் அதிகம் பேர் வாகனத்தை விட்டு இறங்கி காலில் புழுதி படிய வேண்டுமென்பதற்காக கால்நடையாக வந்ததாகவும் ஒரு சம்பவம் உள்ளது . இது நபியவர்களது காலத்திற்குப் பிறகு நடந்தது . இதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இல்லாததால் இது ஹதீஸ் இல்லை ஒரு சில நபித்தோழர்களின் தனிப்பட்ட செயலே இது .எனவே இதை ஆதாரத்துக்கு எடுக்க முடியாது . மேலும் இது வேறு சில நபிமொழிகளுக்கும் முரண்படுகின்றது . எப்படி?,

நபியவர்கள் ஒருமுறை பள்ளிக்கு வந்த போது ஒரு மனிதர் மிகு ந்த நேரமாக வெயிலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அது பற்றி ஒருவரிடம் வினவ அவர் ‘ பகல்முழுதும் வேகும் வெயி லில் நின்ற நிலையிலேயே உட்காராமல் நோன்பு நோற்பதற்கு நேர்ச்சை வைத்திருப்பதாகக் கூறினார் . அதற்கு நபியவர்கள் அவரது நோன்பை நிறைவேற்றச் சொல்லுங்கள் . வெயிலில் நிற்கவோ , உட்காராமல் நின்றுகொண்டிருக்கவோ வேண்டாம் . நீங்கள் படும் இந்த வீண்சிரமத்தை விட்டும் அல்லாஹ் தேவை யற்றவன் என்றார்கள் . ( ஆதாரம் முஸ்லிம் 3100 )

மற்றுமொரு நபித்தோழர் தான் கால்நடையாக நடந்துசென்று ஹஜ்ஜூச் செய்ய நேர்ச்சை வைத்திருப்பதாகக் கூறியபோது நிச்சயமாக இவ்வாறு ஒருவர் தன் உடம்பை வருத்திக் கொள்வதில் எவ்விதத் தேவையுமில்லை அவர் வாகனத்தில் ஏறிச் சென்றே ஹஜ் செய்யட்டும் என்று கட்டளையிட்டார்கள் . ( புகாரி 1732 முஸ்லிம் 3100)

எனவே நபியவர்கள் தடுத்த ஒரு விடயத்தை இன்று தப்லீக் அமைப்பினர் தீன் என்ற போர்வையில் செய்து மக்களின் அனுதாபத்தைத் தம் பக்கம் திருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் . எனவே நபியவர்கள் இபாதத் இல்லை என்று சொன்ன ஒரு செயலை(பைதல் ஜமாஅத்தை) இபாதத்தின் பெயரால் செய்வதற்குப் பெயர் என்ன ? பித்அத்தா? ஸூன்னத்தா ? நீங்களே முடிவு செய்யுங்கள் .

5- இவர்களின் தஃவா கஸ்துகளின் போது கூட்டு துஆ ஓதி விட்டு வெளியேறிச் செல்லல் . இதுவும் நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தாகும் . நபியவர்கள் எத்தனையே ஸஹாபாக்களை மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் , போருக்காகவும் அனுப்பியிருக்கின்றார்களே ! அவ்வேளை கூட்டுப்பிரார்த்தனை புரிந்து விட்டுத்தான் வழியனுப்பினார்களா ? இதற்கான சரியான ஆதாரத்தை நபிவழியிலிருந்து காட்ட முடியுமா? எனவே இந்தக் கூட்டுப் பிரார்த்தனை நபிவழியா? அல்லது அவர்கள் எச்சரித்த பித்அத்தா ?

6- காலை மாலை திக்ர் எனும் பெயரில் ஹதீஸில் வந்த திக்ரு முறைக்கு மாற்றமாகவும் , இவர்களின் பெரியார்கள் சொல்லிக் கொடுத்த பித்அத்தான முறையிலும் திக்ர் செய்தல் .

காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் திக்ர் செய்யுங்கள் என அல்குர்ஆனில் அல்லாஹ்வே சொல்லுகின்றானே! எனக் கூறினால்… உண்மைதான் . தொழுமாறும் அல்லாஹ் கூறுகின்றான் அதற்காக 6 வேளை தொழ முடியுமா ? ளுஹ்ரை 5 ரக்அத்துகளாகத் தொழ முடியுமா ? ஏன் முடியாது நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை என்கின்றோம். அப்படியானால் திக்ரை மட்டும் எப்படி காலை மாலையில் நபிவழிக்கு மாற்றமாக நூறு ,நூறு தடவைகள் செய்ய முடியும் ?. லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை மாத்திரமே 100 தடவைகள் காலை மாலையில் ஓதி வருவதற்கு ஆதாரமிருக்கின்றது. ஏனையவற்றுக்கு ??

7- ஜூமைராத் எனும் பெயரில் வெள்ளிக் கிழமை இரவில் ஒன்று கூடி அன்றிரவு பள்ளியில் இஃதிகாப் இருந்து வணக்கங்கள் புரிதல் வெள்ளிக்கிழமை இரவை மாத்திரம் வணக்கங்கள் புரிவதன் மூலம் விசேஷப்படுத்தக் கூடாதென நபியவர்கள் தடை செய்துள்ளதால் இது பித்அத்தாகின்றது. எதேச்சையாகத்தான் மக்களின் வசதிக்கேற்ப இந்த நாள் தெரிவு செய்யப்பட்தென்று சொல்ல முடியாது ஏனெனில் வெள்ளியிரவில் இபாதத் செய்தல் ஆரம்பத்திலிருந்தே சூபிகளின் மரபு வழிவந்த வழிமுறைகளில் உள்ளதாகும் .

எனவே நான் மேலே சுட்டிக்காட்டியபடி தப்லீக் ஜமாஅத்தில் இல்மு – மார்க்க அறிவு எனும் பெயரில் பலவீனமான ,இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் போதிக்கும் பாடங்களும் , இஸ்லாத்திலில்லாத பித்அத்தான மௌட்டீக விடயங்களும், ஏன் ஷிர்க்கான விடயங்களும் தாராளமாகப் போதிக்கப்படுகின்றன என்பதை முடிந்தளவு ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளேன் .

இது தவிர இல்மு திக்ரின் போர்வையில் பல்வேறு ஷிர்க்கான விடயங்களும் இந்த அமைப்பில் போதிக்கப்படுகின்றன . விரிவஞ்சி அவற்றைத் தவிர்த்துக் கொள்கின்றேன் .

இவைகளும் இல்மு திக்ர் தானா???

ஜிஸ்திய்யாத் தரீக்காவின் ஷேகுமார் வரலாறு என்று ஒரு புத்தகமுண்டு . ஜக்கரிய்யா மௌலானா அவர்களே தமது கைப்பட எழுதியது . இதில் ஷேக்மார்களின் கராமத் எனும் பெயரில் சில சம்பவங்களைக் கூறுகின்றார்கள் . இவை நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லாதது தனி விடயம் . இருப்பினும் இது எப்படி இஸ்லாத்துக்கு முரண்படுகின்றது என்பதைக் கூட கவனிக்காது ஷேகுல் ஹதீஸ் – ஹதீஸ்க்கலை மேதையான இவர்கள் எழுதியுள்ளதே ஆச்சரியமான விடயமாகும் . அவற்றில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன் .

1- ஹஸன் பஸரி என்பவர்கள் பிலபலமான தாபியீன்களில் ஒருவராவார்கள் . இவர்களுக்கும் தரீக்காக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை .இருந்தும் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் இவர்களை ஜிஸ்தியா தரீக்காவின் ஐந்தாவது ஷேக்காக குறிப்பிட்டிருக்கின்றார்கள் . நபியவர்களையே ஜிஸ்திய்யாவின் முதலாவது ஷேக் என்றவருக்கு இது பெரிய விடயமா ? அவர்களது பொன்மொழிகள் என கூறுவதாவது …

நீங்கள் ஹறாமான பொருட்களின் மீது கூட வெறுப்புக் காட்டுவதில்லை .ஆனால் ஹலாலான பொருட்களின் மீதே வெறுப்புக் காட்டும் பெரியார்களை நாம் சந்தித்திருக்கின்றோம் . ( ஜிஸ்தியா ஷேக்கள் வரலாறு 153 )

ஹலாலானவற்றை உண்ணாமல் தவிர்ந்திருப்பது வேறு விடயம் ஹலாலானவற்றை வெறுப்பவர் எப்படிப் பெரியாராக இருக்க முடியும்.? இதை ஹஸன் பஸரி சொல்லியிருப்பாரா ?

ஹஸன் பஸரியவர்கள் பல தடவைகள் நாயைக் கண்டால் யா அல்லாஹ் இந்த நாயின் பொருட்டால் என்னை ஏற்றுக் கொள்வாயாக .. என்று பிரார்த்திப்பார்கள் .
( ஜிஸ்தியா ஷேக்கள் வரலாறு 150 )

நாய் என்ன அல்லாஹ்வுக்கு நெருக்கமா நல்லடியாரா ? இது அல்லாஹ்வையே அவமானப்படுத்துவது போலில்லையா ? இந்த வகை வஸீலாவே தடைசெய்யப்பட்டதாகும் . அப்படியிருக்க கேவலம் நாயின் பொருட்டால் கேட்பது ?? ஹஸன் பஸரி ஒரு ஹதீஸ்கலை மேதை இதை அவர்கள் சொல்லியிருப்பார்களா ? நிரூபித்துக்காட்ட முடியுமா?

2- காஜா அப்துல் வாஹித் :
இவர்கள் பற்றிக்கூறும் போது இவர்கள் இரவெல்லாம் நின்று வணங்குபவராகவும்,பகலில் நோன்பு நோற்பவராகவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறையே நோன்பு திறப்பவராகவும் இருந்தார் . ( அதே நூல் 154)

இவையெல்லாம் நபிகள் தடைசெய்த விடயங்களல்லவா ? இவற்றை ஒரு ஆலிம் இறைநேசச் செல்வர் எப்படிச் செய்ய முடியும் .சரி அவரை விடுவோம் .இதை இபாதத் என சித்தரித்து எழுதும் ஆசிரியர்; ஜக்கரிய்யா மௌலானா பெரிய ஷேகுல் ஹதீஸ் ஹதீஸ்க்கலை மேதையாச்சே.. அவரா இப்படி ?

3- புளைல் இப்னு இயாழ் அவர்களைப் பற்றிக் கூறும் போது ..
‘ இவர்கள் ஒளூச் செய்கையில் ஒருமுறை ஒவ்வொறு உறுப்புக்களையும் மூன்று தடவை கழுவுவதற்குப் பதிலாக இரண்டு தடவைகள் கழுவி விட்டார்கள் . அன்றிரவு நபியவர்கள் இவரைச் சந்தித்து ( நினைவிலேயே!!) புளைலே ! என்னுடைய ஸூன்னத்தை விட்டதற்காக நீர் தூரமாகி விட்டீர் என்றார்கள் . இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக அவர்கள் ஒருவருடம் தினமும் ஐநூறு றக்அத்துக்கள் நபில்த் தொழுவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டார்கள் . மேலும் என்னை யார் சந்திக்காமலும் நான் நோய்வாய்ப்பட்டால் நலன் விசாரிக்க வராமலும் இருக்கின்றாரோ அவருக்கு நான் நன்றி கூறுவேன் என்றார்களாம் . ( அதே நூல் ப: 168-169 )

உழூவின் போது உறுப்புக்களை இரண்டு தடவைகள் கழுவு வதும் நபிவழியே ! நபியவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்
ஆதாரம்: (புகாரி 154) இப்படியிருக்க நபியவர்கள் எங்ஙனம் எமது ஸூன்னத்தைப் புறக்கணித்து விட்டாய் எனக் கூற முடியும் நோயுற்றவரைச் சந்திக்கச் செல்வது நபிவழி . அதை இவர் எப்படி உதாசீனம் செய்ய முடியும் ?? . அதற்கு மேல் ஷேகுல் ஹதீஸூக்கு எப்படி இவையெல்லாம் கிடைத்திருக்க முடியும் . எப்படி கிடைத்ததையெல்லாம் இஸ்லாத்துக்கு முரணாகின்றதா என ஆராந்து பார்க்காமல் எப்படி எழுத முடியும் ?? .

3-இப்றாஹீம் இப்னு அத்ஹமைப் பற்றிக் கூறும் போது ..
இவர்கள் தொடர்ந்து நோன்பு நோற்று நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நோன்பு திறப்பார்களாம் . அதுவும் புற்பூண்டுகளைக் கொண்டுதான் நோன்பு திறப்பார்களாம் ( அதே நூல் ப: 174)

இவ்வாறு செய்வது நபிவழியா? இதைத் தான் நபியவர்கள் போதித்தார்களா ? . உண்மையில் அத்ஹம் இப்படிச் செய்திருந்தாலும் கூட அது அவரது அறியாமையே ! ஆனால் ஷேகுல் ஹதீஸ் இதை எப்படி எழுத முடியும்? . இதை அவ்லியாக்களின் அற்புத வரலாறாகக் கூற முடியும் ? . இதைப் பின்பற்றிப் பிறரும் இப்படிச் செய்தால் அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற முடியுமா ?.

நபியவர்கள் நோன்பு திறக்கும் போது கனிந்த பேரீச்சை கொண்டும் அது இல்லையெனில் காய்ந்த பழத்தாலும் அதுவும் இல்லையெனில் தண்ணீரைக் கொண்டுமே நோன்பு திறப்பார்கள் . ( திர்மிதி : 657 )

இதை விடுத்து புற்பூண்டுகளால் நோன்பு திறப்பது நபி வழியா ? ஷைத்தானின் வழியா ?

இவர்கள் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த போது ஒருவன் வந்து இவரிடம் பழம் கேட்க இவர் மறுக்கவே அவன் தலையில் அடித்து விட்டான் . உடனே இவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் இத்தலை அடிவாங்குவதற்குரியதே எனக்கூறினார்கள் . ( அதே நூல் பு 178 )

3- ஹாஜா ஹூதைபதுல் மர்அஸி…

இவர்கள் ஞானத் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள் . ஆறு நாள்களுக்கு ஒரு தடவையே நோன்பு திறப்பார்கள் . இது பற்றிக் கேட்டால் ஆன்மீக மக்களின் உணவு லாயிலாஹ இல்லல்லாஹ் ஆகும்’ என்று கூறுவார்கள் .

அப்படியாயின் ஆறு நாட்களுக்கொரு முறை எதற்காக ஆன்மீக மக்களின் உணவைப் புறக்கணித்து விட்டு உலக மக்களின் உணவை உண்டு நோன்பை முறிக்க வேண்டும் ?

நன்மைகள் அனைத்திலும் சிறந்தது மனிதன் தனது வீட்டிலேயே இருப்பதாகும் .பர்ழுத் தொழுகைக்காக பள்ளிக்குப் போக வேண்யதில்லையென்றால் நான் வீட்டிலேயே இருப்பேன் என்றார்கள்

எப்போதும் வீட்டிலேயே முடங்கியிருப்பது நபியவர்கள் காட்டித்தந்த வழியா ? துறவிகளின் வழியா? வீட்டிலேயே இருந் தால் எப்படி மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது .??

காஜா மம்ஷாத் அலவி அவர்கள் குழந்தைப்பருவத்திலும் பகலில் ஒருபோதும் பால்க்குடிப்பதில்லை . ஆகவே இவர்கள் குழந்தையிலேயே அவ்லியாவாக இருந்தார்கள் என்று கூறுவர்.

இந்த அறியாமையை என்னவென்று விபரிப்பது .

இவர்கள் இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர் இவருக்கு சுவனத்தைக் கொடுக்குமாறு இறைவனிடம் பிரார்த்தித்தார். இதனைக் கேட்ட இவர் முப்பது வருடமாக சுவர்க்கம் தன்னைப் பூரணமாக அலங்கரித்துக் கொண்டு என்முன் வந்து கொண்டிருந்தது நான் ஒரு முறை கூட அதனை ஏறெடுத்தும் பார்க்க வில்லை .நான் சுவர்க்கத்தின்எஜமானனை ஆசிக்கின்றேன் என்றார்கள் ( அதே நூல் ப: 192 )

அடப் பாவமே ! நபியவர்கள் சொர்க்கத்தைக் கேட்டுப் பிரார்த் திக்குமாறு கூற இவர்களோ ….

காஜா ஸையித் அபூ யூஸூப் ..
‘ இவர்களது சன்னிதானத்தில் ஒரு மனிதன் மூன்று நாட்கள் தங்கியிருந்தால் அவன் கராமத் உடையவனாகி விடுவானாம் . இவர் ஒரு முறை தர்வேஸ் ஒருவரின் வீட்டில் விருந்தினராகத் தங்கினார் . அன்றிரவு அவரின் மகள் பௌர்ணமி நிலவுவானத்திலிருந்து தன் மடியில் இறங்குவது போல் கனவு கண்டார் . காலையில் அவர் ஹஜ்ரத்திடம் விளக்கம் கேட்கச் சென்ற போது அவர் கனவைச் சொல்வதற்கு முன்பே ஹஜ்ரத்தவர்கள் அப்பெண் கண்ட கனவையும் அதற்காக விளக்கத்தையும் கூறினார் . அதன் பின் தர்வேஷ; தன்மகளை அவருக்கே மணமுடித்து வைத்தார் . ஒரு முறை இவர்களுக்கு வணக்கத்தில் கொஞ்சம் சோம்பல் ஏற்படவே அதற்காக இருபது ஆண்டுகள் வரை தண்ணீரே குடிக்காமல் இருந்தார்கள் . வீட்டில் ஒரு தனியறை அமைத்து அதில் தனித்திருந்து பன்னிரண்டு வருடம் வணக்கம் புரிந்தார்கள் .( அதே நூல் பக்கம் : 201)

இது உண்மையாக இருக்குமா ? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

காஜா மவ்தூத் ஜிஷதி …
இவர்களுக்கு பூமியை நொடிப்பொழுதில் கடக்கும் சக்தி இருந்தது. கஃபாவை தவாப் செய்ய மனம் நாடினால் காற்றின் மூலமாக மக்கா சென்று விடுவார்கள் . ஒரு நாள் ஒரு அரச குமாரன் இவர்களிடத்தில் வந்து பரக்கத்துக்காக தனக்கு ஏதேனும் கொடுக்குமாறு வேண்டினான் . ஷேக் முதலில் மறுத்து விட்டு பின் சிபாரிஷின் பேரில் ஒரு தொப்பியை அவனுக்குக் கொடுத்து இதைப் பாதுகாக்கா விட்டால் வருந்த வேண்டியேற்படும் எனக் கூறினார்கள் அவன் அது விடயத்தில் கவனயீனமாக இருப்பது தெரிய வந்ததும் தொப்பி தன் வேலையைச் செய்யவில்லையா ? என்றார்கள் . இதனால் அவன் ஒரு குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவனது இரு கண்களும் தோண்டப்பட்டன . ( அதே நூல் ப: 204 )

காஜா உஸ்மான் ஹாரூனி…
இவர்கள் ஒரு நதியைக் கடக்க வேண்டியிருந்தது . உடனே தன்னிடமிருந்தவர்களிடம் கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார்கள் . அதன் பின் கண்திறந்து பார்த்த போது அனைவரும் நதியைக் கடந்திருந்தார்கள் . எப்படிக் கடந்தார்கள் என்றே தெரியவில்லை . ஒரு முறை ஒருமனிதர் வந்து தனது மகனைக் காணவில்லையென்றும் கண்டுபிடித்துத் தரமாறும் சொன்னார் .அதற்கு அவர்கள் உன் மகன் உன் வீட்டிலிருக்கின்றான் என்றார்கள் .அவர் ஆச்சரியத்துடன் சென்று பார்த்த போது அங்கே மகன் இருக்கக் கண்டார்கள் . அவனிடம் இது பற்றிக் கேட்க நான் ஒரு காட்டில் அடைக்கப்பட்டிருந்தேன் .அப்போது இந்த ஷேக் வந்து என்னை அவிழ்த்து என்கால் மீது தன் காலை வைத்தார் .உடனே கண்ணைத்திறந்து பார்த்த போது நான் என் வீட்டிலிருந்தேன் .என்றான். ( அதே நூல் ப: 211 )

காஜா முயீனுதீன் திஸ்தி சொல்கின்றார்கள் . ‘ நான் ஒரு முரீதை அடக்கம் செய்வதில் கலந்து கொண்டேன் . அடக்கம் செய்த பின் எல்லோரும் போய் விட்டார்கள் . கப்ரடியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் . ஒரு குற்றத்துக்காக அதாபு செய்யும் மலக்கு அவரிடம் வந்தார் . அப்போது ஷேக் உத்மான் காரூனி வந்து இவர் என்னைச் சார்ந்தவர் என்றதும் கப்றாளியின் வேதனை நிறுத்தப்பட்டது . ( அதேநூல் 212 ம் பக்கம் .)

இப்படி இந்தப்புத்தகத்தை நீங்கள் கையிலெடுத்தால் எத்தனையோ ஷிர்க்கான விவகாரங்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் . ஷேக்மார்களின் காலில் விழுந்து பக்தர்கள் கும்பிடுபோட்டதாகவும் , இந்த முஸ்லிம் பெயர் தாங்கிய துறவிகள் தம்மை எதிர்த்தவர்களுக்கு சாபமிட்டு நரகத்துக்கு அனுப்பியதாகவும் , தமது பக்தர்களை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் பொறுப்பை ஏற்றதாகவும் ஆயிரக் கணக்கான கப்ஸாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் உள்ளவற்றை ஒருவன் உண்மைப் படுத்தினால் அவனின் ஈமான் பறிபோய்விடும் என்பது மட்டும் உண்மை .ஆனால் இவற்றை தான் சார்ந்திருக்கும் திஷ்த்திய்யாத் தரீக்காவின் அவ்லியாக்களுக்கு நடந்த கராமத்துக்கள் என ஷேகுல் ஹதீஸ் ஹதீஸ்க்கலை மேதையான ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் சொல்கின்றார்கள் . அவைகளையும் இல்மு திக்ர் என ஏற்று நீங்களும் திஸ்திய்யாத் தரீக்காவில் இணைந்து அவர்களின் ஆசார பக்தராக ஆக வேண்டுமென விரும்புகின்றார்கள் . நீங்கள் தயாரா?

அப்படி நீங்கள் தயாராகி விட்டால் அந்தத் தரீக்காவின் ஷேக்மார்களே உங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நீங்கள் என்னதான் பாவியாக , குற்றவாளியாக இருந்தாலும் அவற்றைப் பொறுத்து உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் ?. சொர்க்கத்தின் திறப்பு- சாவி அவர்களின் கரங்களில்தானே இருக்கின்றது ?. அதன் பின்பு கூட நீங்கள் வேண்டிய பாவங்களைத் தாராளமாகச் செய்து கொள்ளலாம் ?. நீங்கள் அவர்களின் முரீதாக சீடனாக இருக்கும் காலமெல்லாம் இந்தப் பாவமெல்லாம் உங்களின் சொர்க்கப் பிரவேசத்தை ஒருபோதும் தடுத்து விடாது ? .

இப்போது உங்கள் முன்னிலையில் இரண்டு பாதைகள் உள்ளன . ஒன்று நபியவர்கள் காட்டித்தந்த பாதை . அடுத்தது ஜிஷ்த்திய்யாத் தரீக்காவின் ஷேக்மார்கள் காட்டித்தந்த பாதை . இரண்டில் எதைத் தெரிவு செய்வது எனும் உரிமை உங்கள் கையில் உள்ளது . முடிவெடுப்பதும் நீங்கள்தான் அதற்கான பலனைப் பெறுவதும் நீங்கள்தான் . நபிவழி நடந்தால் நரகமில்லை . அதை நாடாதவர்களுக்குச் சொர்க்கமில்லை . சொர்க்கமில்லை .

தொடரும்…

Advertisements

1 பின்னூட்டம்

  1. mohammed shafeeq said,

    ஒக்ரோபர் 25, 2010 இல் 12:25 பிப

    இந்த கட்டுரையை ஒவ்வொரு குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் சகோதரர்களும் முதலில் படித்துவிட்டு பின்னர் பிரிண்ட் எடுத்து ஒவ்வொரு தப்லீக் சகோதரனுக்கும் கொடுக்கவேண்டும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: